கொல்கத்தா
ரவீந்திர நாத் தாகூர் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா சாந்தி நிகேதனில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த விழாவில் மேற்கு வங்க ஆளுநர், மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பல்கலைக்கழகம் கடந்த 1921 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது ஆகும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, “சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியக் குடிமக்களின் வலுவான தேசிய பற்றையும் உணர்வையும் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் பிரதிபலித்தது. இந்த சேவையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மாலியா பல்கலைக்கழகம்,, ஆந்திர பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் செய்து வந்தன,.
இன்று மக்களில் பலர் கல்வி கற்க இவை அனைத்துமுதவி வருகின்றன. மேலும் மக்களை சுய சார்புள்ளவர்களாகக் கல்வி மாற்றி உள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தாகூர் போன்ற தலைவர்களால் இன்று நாம் சுய சார்புள்ளவர்களாக மாறி உள்ளோம். தாகூர் சுயசார்பு இந்தியாவை உருவாக்க நினைத்தார். அவர் வழியில் நாம் இன்று சுயசார்பு இந்தியாவை உருவாக்கி வருகிறோம்” என உரையாற்றினார்.
பிரதமர் தனது உரை மூலம் தாகூருக்கு அஞ்சலி செலுத்துவது போல் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிரசாரம் செய்வதாக உள்ளதாக திருணாமுல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய சுதந்திரப் போராட்ட தலைவர்களை பாஜகவினர் கட்சி மயமாக்குவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்வுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு அனுப்பவில்லை எனத் திருணாமுல் குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் பலகலைக்கழகம், ஏற்கனவே முதல்வருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் ஆனால் விழாவில் கலந்து கொள்ளாமல் மம்தா பானர்ஜி தாகூரை அவமதித்துள்ளதாகவும் பாஜக பதில் கூறி உள்ளது
ஏற்கனவே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலைவரான ரவீந்திர நாத் தாகூருக்கும் குஜராத் மாநிலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மோடி தெரிவித்து இருந்தார். இதையொட்டி மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் ரவீந்திரநாத் தாகூர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் அவரை மற்ற மாநிலங்கள் குறிப்பாகக் குஜராத் மாநிலத்தவர் உரிமை கொண்டாட அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.