சென்னை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி கா தீபம் ஏற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,    அண்ணாமலையார் மலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும்,   “பெஞ்சல் புயல் பாதிப்புக்குப் பின் திருவண்ணாமலை கிரிவலம் மலைப்பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மலை மீது ஏறி ஆய்வு செய்தனர்.  அவர்களின் அறிவுறுத்தலின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் தீப திருவிழா தடைபடாமல் நடைபெறும். இந்த ஆண்டும் மலையின் உச்சியில் தீபம் எரியும் என்றவர்,  திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப மனித சக்தியை பயன்படுத்துவோம் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து,  திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் தீபத் திருவிழாவை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், மகா தீபம் ஏற்றுவதற்கான 350 கிலோ கொப்பரை திரி, 450 கிலோ நெய் சுமக்க தேவையான அளவு மனிதசக்தியை பயன்படுத்தி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் தீபதிருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகா தீபத் திருவிழா நடைபெறும். மலையேறி சென்று தீபத்தை காண அனுமதிப்பது தொடர்பாக வல்லுநர் குழு ஆய்வறிக்கை கிடைத்தவுடன், முதல்-அமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் புவனகிரி தொகுதி வளையமாதேவி வேதநாராயண பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

திருவண்ணாமலையில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் தீபம் ஏற்றப்படுவது பாதிக்கப்படாது. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.