திருவண்ணாமலை: உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை கோவில் தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி 17ந்தேதிவரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி) கோயில் கொடி மரத்தில் கொடியேறியது. கோவிலில் உள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் உலா நடைபெற உள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகர தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்திருவிழாவில் சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இன்று காலை 6 மணியில் இருந்து 7.25 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகுசிறப்பாக அரோகரா கோஷத்துடன் நடெபற்றது. தொடர்ந்து, இன்று காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
நாளை 2-ம் நாள் முதல் 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 6-ம் நாள் விழாவன்று இரவு வெள்ளி ரதம் வீதி உலாவும், 7-ம் நாள் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து 6.48 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி 13-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணியளவில் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்த தீப திருவிழாவில் சுமார் 35 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கு தேவையான தண்ணீர், கழிவுறை, மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழா விவரம்:
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை
01.12.2024 அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்
02.12.2024 அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
03.12.2024 அருள்மிகு விநாயகர்,சந்திரசேகர் உற்சவம்
04.12.2024 கொடியேற்றம்-வெள்ளி வாகனம்,சிம்ம வாகனம்
05.12.2024 தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானங்கள்
06.12.2024 சிம்ம வாகனம், வெள்ளி வாகனம்
07.12.2024 வெள்ளி காமதேனு வாகனம்
08.12.2024 வெள்ளி ரிஷப வாகனம்
09.12.2024 வெள்ளி ரதம்
10.12.2024 மகா ரதம்
11.12.2024 பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்
12.12.2024 கைலாச வாகனம், காமதேனு வாகனம்
13.12.2024 பரணி தீபம் மற்றும் மகா தீபம்
14.12.2024 தெப்பல் உற்சவம்-சந்திரசேகர்
15.12.2024 தெப்பல் உற்சவம்-அண்ணாமலை
16.12.2024 தெப்பல் உற்சவம்-சுப்பிரமணியர்
17.12.2024 சந்திரசேகர் உற்சவம்