திருமலை: திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும், விரைவான தரிசனம் பெறும் வகையிலும் ஏஐ தொழில் நுட்பத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவிலில் பணியாற்றும் மாற்று மதத்தினருக்கு கட்டாய ஓய்வு அல்லது மாற்று இடங்களில் பணி வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதுபோல, திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பிறகு திருப்பதியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், முதியோர் விரைந்து சாமி தரிசனம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேவஸ்தானம் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனம் செய்ய 20 முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப உதவியுடன் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாங்கள் ஒரு சிறப்பு ஆலோசனையை ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து மதம் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தின்போது பணியமர்த்தப்பட்டடு திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் மாற்று மதத்தினரை பணியில் இருந்த மாற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். விருப்ப ஓய்வில் அனுப்புவதா அல்லது வேறு பணிகளுக்கு மாற்றுவதா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றவர், தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களை, வருவாய்த்துறை உள்ளிட்ட பணிகளுக்கு மாற்ற அரசுடன் பேசப்படும் என்றார்.
அதுபோல, திருமலையில் சில மாற்று மதத்தினர் பிரசாரம் மேற்கொள்வதாக தகவல்கள் வருகிறது. அவ்று மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது. விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதுபோல பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய் கொள்முதல் செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, பல மாநிலங்களுக்கு சுற்றுலாத் துறையால் தினசரி ஒதுக்கப்பட்ட 4,000 தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இந்த டிக்கெட்டுகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தியது விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது, அதனால் ரத்து செய்துள்ளோம் என்றார்.