திருமலை,
திருப்பதியில் நடைபெற்று முடிந்த புரட்டாசி பிரமோற்சவ விழாவின் 9 நாட்களில் 9லட்சம் பக்தர்கள் சாமி தரிசணம் செய்து வெங்கடேஷ பெருமாளின் அருளை பெற்று சென்றுள்ளதாக திருப்பதி தேவதஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. 9 நாள் பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சியில் 9 லட்சத்து 17 ஆயிரத்து 532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வெங்கடேஷபெருமாளின் அருளை பெற்று சென்றுள்ளனர்.
இது, கடந்த ஆண்டு நடந்த பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்ற பக்தர்களை விட 35 சதவீதம் அதிகமாகும்.
மேலும் உண்டியல் வருமானமாக ரூ.20 கோடியே 24 லட்சம் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு விட 33.5 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 32.5 சதவீதம் அதிகமாகும். லட்டு விற்பனை மூலமாக கிடைத்த வருமானம் ரூ.4 கோடியே 45 லட்சம் ஆகும். தரிசன வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைக்காமல் நேரிடையாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டதாலும், வி.ஐ.பி.புரோட்டோகால் தரிசனத்தில் பக்தர்களின் தரிசன அனுமதி எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் அதிக அளவில் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தினமும் 2 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களாக மொத்தம் 30 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தினமும் 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. 29 லட்சத்து 96 ஆயிரத்து 736 பக்தர்களுக்கு சிறிய லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவைகள் மூலமாக ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
இது, கடந்த ஆண்டை விட 68 சதவீதம் அதிகமாகும்.விடுதிகள் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.1 கோடியே 64 லட்சம் ஆகும். கருடசேவை அன்று 6 ஆயிரத்து 788 அறைகள் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
3 லட்சத்து 45 ஆயிரத்து 142 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். தலைமுடி இறக்கும் பணியில் 1450 ஆண் ஊழியர்களும், 277 பெண் ஊழியர்களும் வேலை பார்த்துள்ளனர்.
8 லட்சத்து 98 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
15 லட்சம் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது.
பால், டீ, காபி ஆகியவை 11 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 800 பறக்கும்படை ஊழியர்கள், 4 ஆயிரத்து 500 போலீசார், ஆக்டோபஸ் போலீசார் ஒரு பட்டாலியன், 1300 ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் பறக்கும்படையில் வேலை பார்த்துள்ளனர்.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் 1 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து வாகன ஊர்வலத்தை கண்டு ரசித்துள்ளனர்.
4 லட்சத்து 50 ஆயிரத்து 277 பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
திருமலையில் இருந்து திருப்பதிக்கு 6 லட்சத்து 5 ஆயிரத்து 271 பக்தர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
புத்தக விற்பனை மூலமாக கிடைத்த வருமானம் ரூ.57 லட்சத்து 79 ஆயிரத்து 172, ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் 3 ஆயிரத்து 500 பேர் பக்தர்களுக்கு சேவை செய்துள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்பியதை ‘யு டிபூப்’ மூலமாக 10 லட்சத்து 84 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
அதில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் நிகழ்ச்சி நன்றாக இருந்ததாக திருப்பதி தேவஸ்தானத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.