திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து லட்டுக்கு தோஷ நிவர்த்தி செய்யப்பட்டது.
திருமலையில் தயாரிக்கப்பட்டு வந்த திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக சோதனையில் தெரியவந்தது.
திருப்பதி லட்டு குறித்த இந்த சோதனை வெளியானதை அடுத்து பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்தனர்.
இந்த சோதனையின் அறிக்கை ஜூலை மாதம் கிடைத்த நிலையில் செப்டம்பர் முதல் வேறு நிறுவனத்திடம் இருந்து தரமான நெய் வாங்கப்படுகிறது.
இதனையடுத்து வனஸ்பதி கலப்பின்றி புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது.
அதேவேளையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கொழுப்பு கலந்திருந்ததற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகத்தை அர்ச்சர்கள் நடத்தினர்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை லட்டு பிரசாதம், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு விநியோகம் செய்யும் கவுன்ட்டர்கள், 4 மாட வீதிகளில் அர்ச்சகர்கள் தெளித்தனர்.
இதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளதுடன் கொழுப்பு இல்லாத இந்த திருப்பதி லட்டுகளின் விற்பனையையும் துவக்கி வைத்தார்.