திருப்பதி

50 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறும்.   மாடவீதிகள் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி உலா வருவார்.  அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் பெறுவார்கள்.    இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த அண்டு கோவில் வளாகத்தின் உள்ளேயே பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுகிறது.  கோவிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது.   இந்த விழாவுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அதன் பிறகு மாடவீதியில் நடக்கும் உலா கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்றுள்ளது.

திருப்பதி கோவில் வரலாற்றில் முதல் முறையாகத் திருவீதி உலா இன்றி கொடியேற்றம் தொடங்கி உள்ளது.   பிரம்மோற்சவ திருவிழா வரும் 27 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெற உள்ளது.    பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு புரட்டாசி மாதம் பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கமாகும்.   ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இம்முறை பிரம்மோற்சவ விழாவுக்குச் சிறப்புத் தரிசனம் டிக்கட் 12,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.   அவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.  எனவே இந்த விவரம் அறியாமல் பல பக்தர்கள் மலைக்கு வருகின்றனர்.  அவர்கள் மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.   ஆவலுடன் வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது.