திருப்பதி
திருப்பதி கோவிலில் ரூ.10000 செலுத்துவோருக்குச் சிறப்பு தரிசனம் என்னும் முறைக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி பிரமுகர்களின் சிறப்பு தரிசனங்களை ரத்து செய்தார். இதன் மூலம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் ஆகியோர் பரிந்துரையில் சிறப்பு தரிசனம் வழங்கும் முறை முடிவுக்கு வந்தது. பலர் மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் போது ஒரு சிலருக்கு மட்டும் இவ்வாறு சிறப்பு தரிசனம் அளிப்பது நீதி அல்ல என அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் அன்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகரி தர்மா ரெட்டி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ரூ.10000க்கு மேல் நன்கொடை அளிப்போருக்கு ஒவ்வொரு ரூ.10000க்கும் ஒரு சிறப்பு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது எனத தெரிவித்தார். அத்துடன் இந்த பணத்தைக் கொண்டு தலித், பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் வெங்கடேச பெருமாள் கோவில்கள் கட்ட உள்ளதாக தெரிவித்தார்.
சிறப்பு தரிசனத்துக்கு ரூ.10000 கட்டணம் என்பது பக்தர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. அவர்கள், “கடவுள் முன்பு அனைவரும் சமம் என்னும் அடிப்படையில் பிரமுகர்கள் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது பணம் கொடுப்போருக்குச் சிறப்பு தரிசனம் வழங்குவது முந்தைய அறிக்கைக்கு நேர் மாறாக உள்ளது.
இதனால் மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பது குறையப் போவதில்லை. முன்பு பிரமுகர்களுக்கு சிறப்பு தரிசனம் என இருந்தது தற்போது செல்வந்தர்களுக்குச் சிறப்பு தரிசனம் என ஆகி உள்ளது. ஒரு நாளைக்கு இவ்வாறு சுமார் 100 முதல் 200 செல்வந்தர்கள் பணம் கொடுத்து தரிசனம் பெற்றால் வரிசையில் காத்திருக்கும் மக்கள் மேலும் அதிக நேரம் காத்திருக்க நேரிடும்.” எனத் தெரிவித்துள்ளனர்.