திருப்பதி: மக்களின் தரிசனமே முக்கியம், லாப நோக்கம் கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில், திருமலை திருப்பதியில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜுன் 8 ம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். துவக்கத்தில் தினமும் 6,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இப்போது தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று வரை பக்தர்களில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. தேவஸ்தானத்திற்கு லாப நோக்கம் கிடையாது. பக்தர்களுக்கு சாமி தரிசன வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே ஆவல்.
அர்ச்சகர்கள், நாதஸ்வர வித்துவான்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மூலம் பக்தர்களுக்கு பரவவில்லை என்றார்.