திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி.

தல சிறப்பு:

உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே.

பொது தகவல்:

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.

பிரார்த்தனை:

இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.

தலபெருமை:

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மருதீசரே மூலவராக உள்ளார். விநாயகப் பெருமான் மிகப்பெரிய வடிவில் பரிவார மூர்த்தியாக அருள் செய்கிறார்.

நெல்லையில் விநாயகரை மூலவராகக் கொண்டு கொடிமரத்துடன் கூடிய இரண்டு விநாயகர் கோயில்கள் உள்ளன.

ஒன்று நெல்லை டவுனிலுள்ள சந்திப்பிள்ளையார் கோயில், மற்றொன்று நெல்லையில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில்.

ஆனால், உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அளவில் மிகப்பெரிய கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.
கருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார்.

இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள்.

தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள்.

விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது.

(சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது).

தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை. விநாயகரை அடுத்து நெல்லையப்பருக்கு சிறிய சன்னதி உள்ளது.

தல வரலாறு:

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி.

அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.

வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்’ என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.