அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் – கொழுந்துமாமலை – திருநெல்வேலி

தல சிறப்பு:

கோயிலின் வடகிழக்கு மூலையில் சிறிய கிணறு உள்ளது. இதை பாலூற்று என்று அழைப்பர். மழைக்காலத்தில் கிணற்றுநீர் மட்டத்திற்கு மேல் பொங்கி வழியும். இது மிகவும் சுவையாகவும், கலங்கிய நிலையில் தேங்காய் தண்ணீரைப் போலவும் இருக்கும். இதை இளநீர்க் கிணறு என்றும் அழைக்கிறார்கள்.

பொது தகவல்:

இங்கு முதற்கடவுள் விநாயகர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்கிழக்கில் காவல் தெய்வமாக இடும்பன் சந்நிதி உள்ளது. அதற்கு தென்கிழக்கில் சிவபார்வதி, கங்கையம்மன் சந்நிதிகள் உள்ளன.

தலபெருமை:

வெள்ளி அபிஷேகம்: தமிழ் மாத கடைசி வெள்ளியன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் இடம்பெறும். அன்று காலை முதல் மாலை வரை கோயில் நடை திறந்திருக்கும். முருகனுக்குரிய சுக்கிரவார விரதம் இருந்து பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்வர். தொடர்ந்து ஆறு கடைசி வெள்ளியன்று விரதமிருந்து முருகனை தரிசித்தால் குழந்தைப்பேறு, திருமணம், வேலைவாய்ப்புபோன்ற வேண்டுதல்கள் இனிதே நிறைவேறும்.

அனுமனால் வந்த மலை: ராவணனின் மகனான இந்திரஜித் வானர வீரர்கள் மீது நாகாஸ்திரத்தை ஏவினான். அனைவரும் மூர்ச்சை அடைந்து மயங்கினர். அனுமன், வீரர்களைக் காப்பாற்ற மூலிகை பறிக்க வடக்குநோக்கிப் புறப்பட்டார். மூலிகை எதுவென்று தெரியாமல் சஞ்சீவிமலையைக் கையில் தாங்கி திரும்பினார். வரும்வழியில் அம்மலையின் ஒருபகுதி சிதறி பூமியில் விழுந்தது. அப்பகுதியே இங்குள்ள மலையாகும். பசுமையான மூலிகைக் கொழுந்து நிறைந்திருந்ததால் கொழுந்துமாமலை என்று பெயர் பெற்றது.

தல வரலாறு:

இப்பகுதியில் வசித்த முருகனின் அடியவர் கனவில் தோன்றிய திருச்செந்தூர் முருகன், சேரன்மகாதேவி கொழுந்துமாமலையில் தங்கி தியானம் செய்யும்படி கட்டளையிட்டார். அந்த அடியவரும் பல காலம் தியானம் செய்து, முருகனைப் பாலகன் வடிவில் தரிசிக்கும் பேறு பெற்றார். பிற்காலத்தில் அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. கருவறையில் முருகன் நின்றபடி காட்சி தருகிறார். நான்கு கைகளில் மேலிரு கைகள் ஆயுதம் தாங்கியும், கீழிரு கைகள் வரத, அபயஹஸ்தமாகவும் உள்ளன. வலக்கரத்தில் முருகனுக்குரிய வேல் உள்ளது. பாலகனாக இருப்பதால் பாலசுப்பிரமணியர் என்று பெயர் பெற்றார். மலை அருகில் இருப்பதால் மலைக்கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர்.