திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயம்.

தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர்.

அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருப்பதாகவும், லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர்.

சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, லிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.

பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகாசுரனை அழித்து தேவர்களை காத்தார். “எறும்பீஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார்.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.

தலபெருமை:

கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது.

பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு “சிவசக்தி லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம். மன்மதனின் மனைவி ரதி, அழகு மீது தனக்கு ஆணவம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள்.

பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.

சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.

கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

திருவிழா:

வைகாசியில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

பொது தகவல்:

நவக்கிரக சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா, பிரதியூஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இக்கோயிலுக்கு இடது புறத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார். இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளது.

ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம். கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார்.

இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.

பிரார்த்தனை:

சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. திருச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு.