ராமண்ணா வியூவ்ஸ்
 
ramana
சீனியர் ஜர்னலிஸ்ட். தேர்தல் நேரம்  என்பதால் எப்போதும் பரபரதான். அதற்கிடையிலும் அவ்வப்போது அலைபேசுவார்.  இன்று நேரடி தரிசனமே தந்தார்.
“விஷயம் தெரியுமா..” என்று கேட்டபடியே வந்தார். அவர் வழக்கம் அப்படி.  நானும் எப்போதும்போல் புன்னகைத்து வைத்தேன். தானாகவே சொல்ல ஆரம்பித்தார்:
“தேர்தல் நேரம் அல்லவா.. பத்திரிகை பெயரைச் சொல்லி உலவும் நபர்கள் காட்டில் மழைதான். மாண்புமிகுக்கள் அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். பத்திரிகையின் விசிட்டிங் கார்டுடன் செல்பவர்களுக்கு பத்தாயிரம். அடையாள அட்டையுடன் செல்பவர்களுக்கு  ஐம்பதாயிரம்.  அதுவும்  பத்திரிகையின் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் என்றால் இதே தொகை இருமடங்காகிறதாம். அதாவது ஒரு லட்சம். இப்படி கட்டுக்கட்டாய் பணம் கைமாறுகிறதாம்…” என்றவரை குறுக்கிட்டு…. “அடடே.. பத்திரிகையாளர்கள் காட்டில் மழைதான் போல” என்றேன்.
சீனியர் ஜர்னலிஸ்ட், “மழைதான். ஆனால் இப்படி பணம் வாங்குபவர்கள் அனைவருமே வெளிவராத பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள். அதாவது “எங்கள் நாற்காலி” “உங்கள் முக்காலி” “நாளைய கருங்காலி” என்றெல்லாம் பெயர் வைத்து எப்போதாவது பத்திரிகை வெளியிடுபவர்கள். அல்லது வெளியிடாமலே இருப்பவர்கள். இவர்கள்தான் மாண்புமிகுக்களிடம் கறந்துவருகிறார்கள்..”
“ஓ…”
“இன்னும் கேளுமய்யா…  இப்படி ஒரு போலி பத்திரிகையாளர் குரூப், காரில் கிளம்பி ஊர் ஊராகச் சென்று வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறது. நேற்று இரவு விழுப்புரம் பக்கம் இந்த போலி குரூப் காரில் வந்திருக்கிறது. அப்போது ரெய்டில் சிக்கிவிட்டது. மொத்தமாக இருந்த இரண்டு லட்ச ரூபாயை பிடுங்கிவிட்டார்களாம்”
“அடடே.. அப்புறம்…”
“ஆனால் இப்போது வரை இது கணக்கில் வரவில்லை…  ஏன் என்ன என்பதை விசாரி்த்துச் சொல்கிறேன்” என்றபடியே புறப்பட்டார் சீனயர்.