டில்லி:

ந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கில் சர்வதேச நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவுப் பார்த்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான்  ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

ஜாதவ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்த இந்திய அரசு,  அவர் இந்திய  கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஈரானில்  வியாபார நிமித்தமாக சென்றபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டு கைது செய்ததாக குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் அரசின் மரண தண்டனையை எதிர்த்து,  நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்திலும், ஜாதவ் மீதான மரண தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம்,  குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி உத்தரவிட்டதுடன் விரிவான விசாரணை நடத்தியது. அதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு ஆதாரங்களுடன் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் தொடர்ந்து 4 நாட்கள் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றன. அதைlத்தொடர்ந்து  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் சர்வதேச நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இந்த தீர்ப்பில் குல்பூஷன் ஜாதவ் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில்,  பாகிஸ்தான் தலைமை வழக்கறிஞர் அன்வர் மன்சூர் கான் தலைமையிலான சட்டக்குழுவினர் நேற்றே தி ஹேக் நகருக்கு சென்றிருப்பதாகவும், இந்திய சட்டக்குழுவினரும் அங்கு முகாமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.