சென்னை

வரும் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பதையொட்டி நேரடி வகுப்புக்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.   இடையில் ஒரு சில வகுப்புக்கள் தொடங்கப்பட்ட  போதிலும் கொரோனா இரண்டாம் அலை கரணமாக மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன.  தற்போது தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருகிறது.

இதையொட்டி தமிழக அரசு வரும் செப்டம்பர் 1 முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.   தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் மட்டுமே நடைபெறும் நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வகுப்புக்கள் வரை பள்ளிகளிலும், அனைத்து பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு வகுப்புக்கள் கல்லூரியிலும் நேரடியாக நடைபெற உள்ளன/

தமிழக அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட தினங்களில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த படிப்புக்களுக்கான வகுப்புக்கள் நடைபெறும் எனக் கால அட்டவணை வெளியிட்டுள்ளது.

அந்த கால அட்டவணை பின் வருமாறு :

மூன்று வருடப் பட்டப்படிப்பு வகுப்புக்கள், பட்ட மேற்படிப்பு வகுப்புக்கள் அதாவது பி ஏ, பிஎஸ்சி, பி காம், பி எல், பி சி ஏ, பி பி ஏ, எம் சி ஏ போன்ற படிப்புக்களுக்கு இரண்டாம் வருட வகுப்புக்கள் திங்கள், புதன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும்.   இதே படிப்புக்களுக்கான மூன்றாம் வருட வகுப்புக்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும்.

இரண்டாம் வருட எம் ஏ, எம் எஸ்சி, எம் காம்,  எம் பி ஏ,  எம் இ, எம் எஸ்சி, எம் எல், எம் டெக் போன்ற படிப்புக்களுக்கான வகுப்புக்கள் அனைத்து நாட்களில் நடை பெற உள்ளன.

நான்கு வருடப் பட்டப்படிப்புக்களான பி இ, பி டெக், பி எஸ்சி (விவசாயம்) போன்ற படிப்புக்களுக்கு, இரண்டாம் வருட வகுப்புக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், மூன்றாம் வருட வகுப்புக்கள், செவ்வாயா, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நான்காம் ஆண்டு வகுப்புக்கள் அனைத்து நாட்களும் நடைபெற உள்ளன.

ஐந்து வருடப் பட்டப்படிப்புக்களான பி ஆர்க், பி வி எஸ்சி, மற்றும் சட்ட படிப்புக்கள் இரண்டு மற்றும் நான்காம் வருட வகுப்புக்கள் திங்கள், புதன் வெள்ளிக்கிழமைகளிலும் மூன்று மற்றும் ஐந்தாம் வருட வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெற உள்ளன.