டில்லி

மோட்டார் வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் புதுப்பிக்கக் காலக் கெடு  செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா அச்சம் காரணமாக மத்திய அரசு மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.   அதன் பிறகு பல முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இதனால் பல அரசு அலுவலகங்கள் இயங்காத நிலை ஏற்பட்டது.  இதையொட்டி மோட்டார் வாகன ஆவணங்களான  வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையொட்டி மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து இருந்தது.   கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை.   ஆயினும் தற்போது அரசு அலுவலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அலுவலகங்களில் முழு அளவுக்கு பணியாளர் வர அனுமதிக்கப்படவில்லை.

மத்திய அரசு இன்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அதில், “ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது  எனவே  தற்போதைய ஆவணாகக்ளை செப்டம்பர் இறுதி வரை பயன்படுத்தலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.