திருமலை

தேசிய ஊரடங்கு  நீட்டிப்பை முன்னிட்டு மே 3 வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்ததால் அரசு ஒரே இடத்தில் பலர் கூடுவதற்குத் தடை விதித்தது.   அவ்வகையில் தினசரி லட்சக் கணக்கான பக்தர்கள் கூடும் திருப்பதி கோவிலில் கடந்த மார்ச் 20 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.   கோரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவித்தது.  அதையொட்டி தேவஸ்தானம் ஏப்ரல் 14 வரை பக்தர்கள் வர தடை விதித்தது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் தொடர்வதால் நேற்று பிரதமர் மோடி தேசிய ஊரடங்கை மே 3 வரை  நீட்டிப்பதாக அறிவித்தார்.   இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று முதல் திருப்பதி கோவிலில் பக்தர்களை அனுமதிக்க இருந்த தேவஸ்தானம் மே 3 வரை பக்தர்கள் அநுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.

ஆயினும் கோவிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் வழக்கம் போல் அர்ச்சகர்கள் நடத்த உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   அர்ச்சகர்கள் பாதுகாப்புக்காக கோவிலின் முன் மூலிகை கிருமிநாசினி பாதி அமைக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அமைத்துள்ளது.

இந்த சுரங்கப்பாதையில் சென்சார் மூலம் ஆட்கள் நடமாடும் போது மூலிகை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.  இந்த கிருமி நாசினி  துளசி, கற்றாழை உள்ளிட்ட பல மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.   இந்த கிருமி நாசினி ரசாயனத்தால் ஏற்படும் கண் எரிச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படாமல் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் எனக் கூறப்படுகிறது.