டோக்கியோ: அடுத்த 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் தளத்தை (portal) திறந்திருக்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள்.

இத்தளத்தில், டிக்கெட் கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு போட்டிக்கான நேரங்கள் உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜப்பானில் வாழும் ரசிகர்களுக்காக, லாட்டரி மூலமாக வெளிப்படையான டிக்கெட் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேசமயம், வருகின்ற மே 9ம் தேதி முதல் தொடங்கும் ஜப்பானியர்களுக்கான டிக்கெட் லாட்டரி, அதேமாதம் 28ம் தேதி முடிவடைகிறது. அதேசமயம்,வெளிநாட்டு ரசிகர்கள், ஜுன் மாதம் 15ம் தேதி முதல் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

மிகவும் குறைந்த விலை டிக்கெட் 2,500 ஜப்பானிய யென்னுக்கு (22 அமெரிக்க டாலர்) கிடைக்கும் அதேநேரத்தில், அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.3,00,000 ஜப்பானிய யென்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பல ஸ்டேடியங்களின் இருக்கை விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்பதால், டிக்கெட்டுகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், மொத்தமாக 7.8 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வருமென்று தோராயமாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில், 70% முதல் 80% டிக்கெட்டுகள் ஜப்பானிய ரசிகர்களுக்கே ஒதுக்கப்பட்டு, மீதமுள்ளவையே வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வரும் 2020ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி நிறைவடைகிறது.

– மதுரை மாயாண்டி