சென்னை: 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வேண்டுமானால் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறவேண்டும் என்று அரசு போக்கு வரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 5ந்தேதி நடைபெற்ற போக்குவரத்து மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார்.

அதன்படி, இதுவரை  3 வயது வரை குழந்தைகள் கட்டணம் இன்றி பயணிக்கும் நிலையில் 5-வயது வரை கட்டணம் கிடையாது என கூறினார். அத்துடன் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும்,  விழா நாட்களைத் தவிர இதர நாட்களில் இணைய வழி வாயிலாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், பேருந்தில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  இருக்கை தேவை என  பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. (மடியில் வைத்துக்கொண்டால் கட்டணம் கிடையாதாம்)

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக்கட்டணம் பெறுவதற்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் பெறப்பட மாட்டாது என்று மானியக் கோரிக்கையின்போது போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் அறிவித்தாா்.

குழந்தைகளை மடியில் அழைத்துச் செல்வது அசௌகரியம் ஏற்படும் எனவும், விருப்பமுள்ளவா்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு பயணச்சீட்டு பெற்று பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடா்ந்து இருக்கும்.

மேலும், பெற்றோா் விருப்பப்பட்டால் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுத்து இருக்கையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. அவ்வாறே அனைத்துப் போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லா இருக்குப்பா உங்களது இலவச அறிவிப்பும் – விளக்கமும்…