சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் வருகையின்போது, அவருக்கு எதிராக பதாயை வீசிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் , ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் போடுறேன்னு மக்களை ஏமாற்றிவிட்டார் என்ற கோபத்தில் வீசியதாக முதியவர் துரைராஜ் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரிதமராக பதவி ஏற்றார். முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவர் வங்கிக்கணக்கில் இந்த ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியதாக தகவல்கள் வெளியானது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால், அவரது பேச்சில், ‘தேர்தல் பாஜக வெற்றி பெற்றால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பணம் செலுத்தும் அளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று பேசியதாக கூறப்படுகிறது. அவர் எந்தவொரு தேர்தல் பிரசாரத்தின்போதும், நான் வெற்றி பெற்றால் ரூ.15 லட்சம் பணத்தை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று, அவர் கூறவில்லை. இதுதொடர்பாக உண்மை கண்டறியும் ஊடகங்களும் விளக்கம் அளித்துள்ளன.
ஆனால், இன்னும் பலர், மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக ஏமாற்றி தேர்தலில் வெற்றிபெற்று விட்டதாக கூறி வருகின்றனர். அதுபோன்ற ஒரு எண்ணத்தின் காரணமாகவே. சென்னையில் அமித்ஷா வருகையின்போது பதாகை வீசிய முதியவரும் தெரிவித்து உள்ளார்.
இன்று மதியம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விமான நிலையம் அருகே, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அவர்களை நோக்கி கை அசைத்தவாறு சாலையில் நடந்து சென்று உற்சாகப்படுத்தியபோது, திடீரென சாலையோரத்தில் இருந்து அமித்ஷா மீது பதாகை வீசப்பட்டது. அந்த பதாகையை காவலர் தடுத்ததுடன், பதாகை வீசிய நபரை பிடித்து கைது செய்தனர்.
தற்போது காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த முதியவர் பெயர் துரைராஜ் (வயது 66) என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே , தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்து, மோடி ‘’ரூ.15 லட்சம் பணம் வங்கிக் கணக்கில் போடுறேன்னு சொன்னாரே, இன்னும் போடலையே என்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், மோடி ரூ.15லட்சம் தருவேன் என்று கூறி ஏமாற்றிவிட்டாரே என்ற கோபத்தில், இன்று அமித்ஷா மீது பதாகையை வீசி தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.