டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள ரவு’ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த சில வாரங்களாக டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதில் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் (Basement Floor) வெள்ளநீர் புகுந்தது.
அப்போது அடித்தளத்தில் அமைந்துள்ள நூலகத்தில் இருந்த மாணவர்களில் 2 பெண் உள்ளிட்ட 3 மாணவர்கள் வெள்ளநீரில் இருந்து வெளியேற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவத்தின் போது 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலகத்தில் இருந்ததாகவும் அவர்களை அங்கிருந்தவர்கள் கயிறுகள் கட்டி மீட்டதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெச்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.