புதுடெல்லி:
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக ஆட்சியும் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், இருக்கும் வேலையை இழந்துவிட்டு தினக் கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக நிற்கிறார்கள்.
டில்லி, மும்பை, சென்னை ஆகிய பெரு நகரங்களில் 36 கூலித் தொழிலாளர்களை சந்தித்து ‘ஸ்க்ரோல்.இன்’ இணையம் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை ஒரே குரலில் ஒழிக்கிறார்கள் 36 தொழிலாளர்கள்.
புதுடெல்லியில் சுபாஷ் நகர் பூங்கா அருகே கூலித் தொழிலாளர்கள் ஒன்று கூடுகின்றனர். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பெயிண்டிங், கட்டிய மேஸ்த்திரி, சுமை தூக்கும் பணி கிடைக்கும். இவர்களில் பெரும்பாலோர் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு மோடி பிரதமரானதும் இவர்கள் நிலைமை மாறியதா என கேள்வி எழுப்பியபோது, அவர்களிடம் கோபம்,ஆத்திரம் தான் விடையாக வந்தது.
2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னரே தாங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதாக சொல்கிறார்கள்.
தினக் கூலி உயர்ந்தாலும், மாதத்தின் வேலை நாட்கள் குறைந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
பால், காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏதும் வாங்க முடியாமல் தாங்கள் அவதிப்படுவதாக இவர்கள் மட்டுமல்ல…
மும்பை, சென்னை தொழிலாளர்களும் ஒரே குரலில் கூறுகிறார்கள். சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்ட பின், தங்கள் பொருளாதார நிலை முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் இந்த 3 பெரு நகரங்களின் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
அங்கீகாரமில்லா கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தபின் கட்டுமானத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு வேலை இழந்துவிட்டதாக டெல்லி தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மும்பை மற்றும் சென்னை தொழிலாளர்களுக்கு டெல்லி தொழிலாளர்களின் பிரச்சினையும் உள்ளது. அதோடு, வெளிமாநில தொழிலாளர்களின் வருகையும் இவர்களின் வேலை வாய்ப்பை பாதித்துள்ளது.
43 வயதான சென்னையில் பணியாற்றும் கே.பி.வாமனன் என்பவர் கூறும்போது, “பொங்கல் சமயத்தில் இந்தி மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் அவர்கள் சொந்த ஊருக்கு சென்றபோதுதான், எனக்கு கொஞ்சம் வேலை கிடைத்தது” என்கிறார்.
மணல் அள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்த பின், கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர்தான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மணல் பிரச்சினை எல்லாம் வந்ததாக சென்னை தொழிலாளர்கள் சொல்கின்றனர்.
கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்ததற்கு மோடியே காரணம் என்கிறார்கள் சென்னை தொழிலாளர்கள்.
கடந்த 1970-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு மற்றும் வேலையில்லாத விவரங்கள் வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் வேலை தரும் நிறுவனங்களிடம் இருந்து இத்தகைய விவரத்தை தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு இதுவரை சேகரிக்கவில்லை.
கடைசியாக 2011-12 ம் ஆண்டுதான் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு சர்வே செய்துள்ளது. அப்போது 2005- ஆண்டைவிட 9 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருந்தது.
பின்னர் இதுபோன்ற சர்வேக்களை மத்திய அரசு கைட்டுவிட்டது. எனினும் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வருவதற்கு ஆதாரங்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக கட்டுமானப் பணி ஸ்தம்பித்துள்ளது. முதலீடு குறைந்துவிட்டது. ஏற்றுமதி குறைந்துவிட்டது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இவ்வாறு ‘ஸ்க்ரோல்.இன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பெரு நகரங்கள் அனைத்திலும் கூலித் தொழிலாளர்கள் ஒர் இடத்தில் ஒன்று கூடுகிறார்கள்… காத்திருக்கிறார்கள். சிலருக்கு 3 நாட்கள் கழித்து வேலை கிடைக்கிறது. சிலருக்கு இன்னும் அதிக நாட்கள் ஆகிறது.
வெறும் கையோடு செல்லும் இவர்களது பரிதாப வாழ்க்கை பந்தாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.