ஹாசன், கர்நாடகா
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட மசூதிகளின் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு இஸ்லாமியர்கள் இந்துக்களாக மதம் மாற வேண்டும் என மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பட்டியலுக்கு நாடெங்கும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதையொட்டி கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசன், அர்சிகெரெ, சக்லேஷூர், பேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளின் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இந்த கடிதங்களில் இஸ்லாமியர்களின் நாட்டுப் பற்று குறித்தும் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பட்டியலை எதிர்ப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும் அந்த கடிதங்களில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கும் இஸ்லாமியர்கள் இந்து மதத்துக்கு மாற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கடிதங்களில் எழுதியவர் பெயர் இல்லை எனினும் அனுப்புபவர் விலாசத்தில் பெல்லாரி சட்டப்பேரவை உறுப்பினர் சோமசேகர ரெட்டி மற்றும் விஜயநகர சட்டப்பேரவை உறுப்பினர் ஆனந்த் சிங் பெயர்கள் உள்ளன.
இது இந்தப் பகுதி இஸ்லாமியர்கள் இடையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இஸ்லாமியத் தலைவர் ஒருவர், “நாங்கள் அமைதியை விரும்பும் நேரத்தில் ஒரு சிலர் தேவை இல்லாமல் பதட்டத்தை உண்டாக்கி வருகின்றனர். எனவே காவல்துறை உடனடியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஒரு சில உள்ளூர் வாசிகளுக்குத் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.