பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரின் கைதைக் கண்டித்து, ஒக்கலிகா சங்கங்கள் நடத்தியப் பேரணியில் மத்திய பெங்களூரு பகுதியின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; கர்நாடக காங்கிரசின் வலிமைவாய்ந்த தலைவராக திகழ்பவர் டி.கே.சிவகுமார். இவர் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான இந்த சமூகத்தின் தலைவரான இவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த சமூக சங்கங்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று பெங்களூரின் நேஷனல் கல்லூரி மைதானத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், மைசூரு சாலையில் உள்ள சுதந்திரப் பூங்காவை நோக்கி பேரணியாக சென்றனர். இதனால், பெங்களூரின் மையப்பகுதியின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒக்கலிகா சமூகத்தின் பல சங்கங்கள் அறிவித்த இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதனால் பசவன்குடி, மைசூரு சாலை, ஜே.சி.ரோடு மற்றும் நேஷனல் கல்லூரியைச் சுற்றிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.