இடாநகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர்.

இடாநகரில் உள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். போராட்டத்தில் ராஜீவ்காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் வடகிழக்கு மத்திய அறிவியியல் தொழில்நுட்ப கல்லூரி, அருணாச்சல பிரதேச சட்டத்துறை மாணவர்களும் இணைந்தனர்.

குடியுரிமை சட்டத்தில் இருந்தும், பாஜகவில் இருந்தும் விடுதலை வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். அதன்பிறகு பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக சென்ற அவர்கள், பாகே தினாலி, நகர்லான் வழியாக இடாநகர் வரை 30 கிலோமீட்டர் தூரம் பேரணி சென்றனர்.

அருணாச்சல பிரதேச முதலமைச்சரை கண்டித்து முழக்கமிட்ட மாணவர்கள், இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் வாய்திறந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து மாணவர் கூட்டமைப்பின் தலைவர் தோபும் சோனம் பேசுகையில், 2016ம் ஆண்டு முதலே நாங்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை மாநில பாஜக அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.

எங்கள் உணர்வுகளை இந்த இரு அரசுகளும் புரிந்து கொள்ளவில்லை. எங்களை பிரித்தாள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செயல்படுகிறது. இது ஒரு சர்வாதிகாரமான செயல்.

வடகிழக்கு மக்களுக்கு, இந்த போக்கு சமுதாயத்துக்கு மிகவும் ஆபத்தானது. பல கட்டங்களில் எங்களின் போராட்டங்களை முன் எடுத்துச் செல்வோம் என்றார்.

வடகிழக்கு மத்திய அறிவியியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் தலைவர் தடார் மாமங் பேசும் போது, எங்களை முட்டாளாக்கி இருக்கிறது இந்த பாஜக அரசு. தொடர்ந்து நாங்கள் போராடுவோம்.

அசாம் பற்றி எரிகிறது. அந்த வலியை எங்களாலும் புரிந்து கொள்ள முடிகிறது. எங்களுக்கும் வலிக்கிறது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். மத்திய அரசு எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ராஜீவ்காந்தி பல்கலைக்கழக மாணவர் செயலாளர் குமார் ராய் கூறுகையில், அசாம், திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் பரவி வருகின்றன. ஆனால் மத்திய அரசு மவுனமாக பார்த்து வருகிறது.

அவர்கள் வகுப்புவாத எண்ணத்துடன் செயல்படுகின்றனர். மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு பிரச்னைகள் உருவாகாத வண்ணம் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.