யவத்மால், மகாராஷ்டிரா.
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் நகரில் ஒரு கிணற்றை சுத்தம் செய்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகளை எடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் யவத்மால் நகரில் தற்போது குடிநீர் பஞ்சம் மிகவும் உள்ளது. நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் சுத்தம் செய்ய உதவுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்ற ஒரு இளைஞர் தன்னார்வு தொண்டு அமைப்பு பாழடைந்த கிணறுகளில் தூர் வாறி அதில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நகரில் ஷிந்தே நகர் பகுதியில் உள்ள சாய் மந்திர் அருகில் உள்ள ஒரு கிணற்றை அவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று சுத்தம் செய்தனர். அப்போது பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் உள்ளே இருப்பதைக் கண்டு அதை வெளியே எடுத்து பிரித்துப் பார்த்தனர். அவற்றுள் ஆயிரக்கணக்கில் புதிய ஆதார் அட்டைகள் இருந்துள்ளன. அனைத்தும் ஒரிஜினல் அட்டைகள் ஆகும்.
அந்த அட்டைகள் அருகில் உள்ள லொகரா என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது,. இதை ஒட்டி அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளை சோதித்ததில் மேலும் ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள் மற்றொரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்த அட்டைகள் சிறிதளவு பாழாகி இருந்தாலும் அனைத்து அட்டைகளும் படிக்கக் கூடிய நிலையில் இருந்தன.
இது குறித்து இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த அட்டைகள் தபால் துறையினரால் வீசபட்டிருக்கலாம் என்னும் எண்ணத்தில் யவத்மல் தலைமை தபால் அதிகர் ஆனந்த் சர்கார் ஒரு விசாரணைக் குழு அமைத்துள்ளார். அத்தோடு வருவாய்த்துறை அதிகாரியும் தனது சோதனையை தொடங்கி உள்ளார்.
வங்கி கணக்கு உட்பட பலவற்றிற்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.