டில்லி:

ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய தொழிற்சங்க தொழிலாளர்கள் டில்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டில்லியில் 3 நாள் தர்ணா போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதனால் டில்லி நாடாளுமன்ற சாலையில் எஸ்பிஐ கட்டடத்தில் தெ £டங்கி ஜீவன் விகார் கட்டடம் வரை பெண்கள் தரையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதில் சமூக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலார்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பீகார் ராஜ்ய வித்யாலயா ராசேயா சங்கத்தை சேர்ந்த மதிய உணவு திட்ட ஊழியர் கோஹாலி குப்தா கூறுகையில், ‘‘இந்த போராட்டத்தில் நாங்கள் 500 பேர் கலந்து கொண்டுள்ளோம். சிறப்பான ஊதியம் வேண்டும் என்று கேட்கிறோம்.

தற்போது மாதம் ஆயிரத்து 250 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். இதையும் மிக தாமதமாக வழங்குகிறார்கள். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை பார்க்கிறோம். குறைந்தபட்சம் ரூ. 18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்’’ என்றார்.

மகாராஷ்டிரா பார்பனி மாவட்டத்தை சேர்ந்த குந்திதேவி கூறுகையில், ‘‘நாங்கள் கழிப்பிடத்தை சுத்தம் செய்கிறோம். பள்ளியை பெருக்குகிறோம். இது எங்கள் பணி கிடையாது. ஆயிரத்து 250 ரூபாய் சம்பளத்தை கொண்டு எங்களது குழந்தைகளை எப்படி படிக்க வைத்து ஆளாக்குவது. ஆண்டுக்கு நான்கு சீருடை புடவை வழங்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், ‘‘இந்த கோரிக்கைகளில் பெரும்பாலானாவை கடந்த காலங்களில் இருந்தே உள்ளது. இதில் சில நடைமுறைப்படுத்தும் நிலையில் உள்ளது. அவர்கள் மீது எங்களுக்கு எதிர்மறை கருத்து கிடையாது. அனைத்து பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு. அதனால் தர்ணா போராட்டம் நடத்துவதை விட் டுவிட்டு அரசுடன் பேச்சு நடத்த முன் வர வேண்டும்’’ என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்திந்திய பெண்கள் முற்போக்கு சங்க செயலாளர் கவிதா கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது. அவர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெற வேண்டும். இந்த போராட்டம் அரசுக்கு எச்சரிக்கையாக அமையும்’’ என்றார்.