சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதிக்குள் விருப்ப மனு அளிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என கூறி கல்லாக்கட்டி வருகின்றன. இந்த நிலையில், தேமுதிகவும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்து உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி, எந்த கூட்டணியில் இடம்பெறுகிறது, எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பதே இன்னும் முடிவாகாத நிலையில், கட்சியினரிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நோக்கில், அனைத்துக்கட்சிகளும், அனைத்து தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்கலாம் என்று கூறி, அதற்காக குறிப்பிட்ட அளவிலான பணத்தை செலுத்தக்கூறி, வசூலித்து வருகிறது.
அதுபோல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தும், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்து உள்ளார்.
விருப்பமனு வாங்குபவர்கள், மார்ச் 5-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், பொதுத்தொகுதிக்கு விருப்பமனு கட்டணமாக ரூ.15,000-மும், தனித்தொகுதிக்கு ரூ.10000-மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.