புதுடெல்லி:
அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து கூறுவோரை தேச விரோதிகள் என்பது பாஜக கொள்கையல்ல என அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
ஏப்ரல் 6-ம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாள். இதனையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 முறை என்னை வெற்றி பெறச் செய்த காந்திநகர் மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி. நாடு தான் எனக்கு முதன்மையானது. அடுத்தது கட்சி கடைசியில் தான் சொந்த நலன்.
நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேசவிரோதிகள் என்பது பாஜகவின் கொள்கையல்ல.
நமது கருத்துக்கு எதிரானவர்களை பாஜக ஒருபோதும் எதிரிகளாகப் பார்த்ததில்லை. அவர்களது கருத்துகளை ஆலோசனையாகவே எடுத்துக் கொண்டுள்ளோம். தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தங்களை விமர்சிக்கும் எதிர்கட்சியினரை தேசவிரோதிகள் என அக்கட்சியின் தலைவர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அத்வானி தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் கடந்த 1991&ம் ஆண்டு முதல் அத்வானி வெற்றி பெறுகிறார். இம்முறை அந்த தொகுதியில் பாஜக தலைவர் அமீத்ஷா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.