பெங்களூரு
பெங்களூருவில் நேற்று நடந்த வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியோர் அதற்கான இழப்பீட்டை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள புலிகேசி நகரக் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன என்பவர் தனது முகநூல் பதிவில் இஸ்லாம் மற்றும் முகமது நபியைக் குறித்து தவறான பதிவு இட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையொட்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூட்டமாகச் சென்று டிஜே ஹள்ளி காவல்நிலையத்தில் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கற்களை எரிந்தும் அங்கிருந்த காவல்துறை மற்றும் தனியார் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். கூடியிருந்த சுமார் 500 பேர் காவல்துறை கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர்.
அத்துடன் தற்போது கட்டுமானத்தில் உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாச மூர்த்தி மற்றும் அவர் தங்கி இருந்த அடுத்த வீடு ஆகியவற்றின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அங்குக் கூடியிருந்த கும்பல் அவ்விரு கட்டிடஙளையும் தீ வைத்துக் கொளுத்தினர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால் நள்ளிரவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்
உயிர் இழந்த ஜாவேத் கான்,யாசின் பாஷா, மற்றும் ஷேக் சாதிக் ஆகிய மூன்று இளைஞர்களும் டிஜே ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த வன்முறையில் 60 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த கலவரத்தில் காவல் நிலைய கட்டிடம், இரு பேருந்துகள்,இரு ஜீப்புகள், 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. இதைத் த்விர சீனிவாச் மூர்த்தியின் வீடு மற்றும் அருகில் உள்ளோர் நிறுத்தி வைத்திருந்த சுமார் 60 வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, “எந்த ஒரு மாநிலத்தில் கலவரம் நிகழ்ந்தாலும் அதில் சேதமடையும் பொதுச் சொத்துக்களுக்கான இழப்பீட்டைச் சேதம் செய்தோரிடம் இருந்து வசூலிப்பது வழக்கமாகும். எனவே பெங்களூரு வன்முறையில் சேதமடைந்த பொதுச் சொத்துக்களுக்கான இழப்பீட்டைச் சேதம் செய்தோரிடம் இருந்து விரைவில் வசூலிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.