டில்லி
அரசு தனிமை மையத்தில் இருந்து வெளியே சென்றாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் கொரானா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது இதுவரை 10 நாட்கள் ஆகி உள்ள நிலையில் நேற்று இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில் , ”வெளிநாட்டில் இருந்து அவரவர் நாட்டினரைச் சோதனைக்கு உட்படுத்தி நாட்டில் இருந்து திருப்பி அனுப்புமாறு வேண்டுகோள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களை அழைத்துச் செல்ல வெளிநாட்டு அரசின் தனி விமானங்கள் மத்திய விமான பயண அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு ஏற்படுச் செய்யப்படும்.
இவ்வாறு சோதிக்கப்படும் நபர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என உறுதி செய்த பிறகே அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடைய உள்ளூர் போக்குவரத்தை அந்நாட்டின் தூதரகம் ஏற்பாடு செய்யும், இந்த வாகனங்கள் தடையின்றி செல்லத் தேவையான உரிமங்கள் மாநில அரசு வழங்கும்.
அரசின் தனிமை மையங்களில் உள்ளவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை எனில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு குழுவாக இருந்து அவர்களில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பினும் இந்த விதி செல்லாது. மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குச் செல்ல போக்குவரத்தை அவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் செல்ல வேண்டிய தடத்துக்கான அனுமதி குறிப்பிட்ட வழியில் குறிப்பிட்ட தினத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். இவ்வாறு வீட்டுக்க்குச் செல்பவர்களின் விவரங்கள் அவர்களின் மாநிலம் அல்லது யூனியன் அரசுக்கு தெரிவிக்கப்படும், அவர்கள் மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமையில் இருக்க வேண்டும். இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.