தூத்துக்குடி:
கடந்த 22ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒருபுறம் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான கமிஷனும் இன்று தனது விசாரணையை தொடங்குகிறது.
இன்று தூத்துக்குடி வருகை தரும் ஆணைய தலைவர், முதன்முதலில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகே தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடமும் சென்று, தனது விசாரணையை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.