தூத்துக்குடி:
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 22ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் பிளஸ்2 மாணவி ஸ்னோலின் என்ற இளம்பெண்ணும் ஒருவர். இவர் போலீசாரால் வாயில் சுடப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
16 வயது மாணவியின் வாயில் சுட்டு காவல்துறையினர் கொன்றது, காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தையும், மனிதாபிமானமாற்ற வெறித்தனத்தையும் உலகுக்கு காட்டியது.
இந்த நிலையில் உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் மீண்டும் போஸ்ட்மார்ட்ம் செய்யப்பட்து, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி ஸ்னோலினின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து இன்று அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அவரது சொந்த ஊரான மினி சகாயபுரத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த இறுதி ஊர்வலகத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.