ஜூலியன் ரியோஸ்

பலவித வகையில், வண்ணங்களில் பிராக்கள் விற்பனை ஆகின்றன. ஆனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை கண்டறியும் பிரா ஒன்று விற்பனைக்கு வந்திருக்கிறது தெரியுமா?ஆம்..

இளம்பெண்களில் ஆரம்பித்து முதிய பெண்கள் வரை பலரையும்  மிரட்டி வருவது இந்த மார்பக  புற்றுநோய்தான்.  ஆரம்பத்திலேயே இந்த நோயின் அறிகுறிகளை கண்டறிந்து தக்க சிகிச்சை பெற்றால், நோயிலிருந்து மீள முடியும். ஆனால் பெரும்பாலோருக்கு இந்த நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ள முடிவதில்லை.

தவிர, மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கும் மருத்துவ சோதனைகள், அதிக செலவு பிடிக்கும். ஆகவே,  நடுத்தர மற்றும் ஏழை பெண்களுக்கு சிக்கலான நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு, தீர்வு காண, மெக்சிகோவைச் சேர்ந்த ஜூலியன் ரியோஸ் என்பவர் பிரா மூலம் தீர்வு கண்டிருக்கிறார்.

இவர் உருவாக்கியுள்ள நவீன பிராவை அணிந்துகொண்டால், மார்பக புற்று நோய் இருந்தால் அதை முன்கூட்டியே அறியலாம் இந்த  ஸ்மார்ட் பிராவில்  200 சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, அதன் செயல்பாடுகளை ஸ்மார்ட்ஃபோன் செயலி அல்லது கணினியுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

இதையடுத்து  வெப்பநிலை உயர்வு, நிற மாற்றம் போல மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்த பிரா பதிவு செய்யும். இதன் மூலம்  மார்பகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்துவிடலாம். இது மட்டுமல்ல…  மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, புற்றுநோய் ஏற்பட்டுவிட்டதா, என்பதையும் அறிய முடியும்.

இதன் மூலம் உடனடியாக, அதற்கான மருத்துவ சோதனை, சிகிச்சைகளை மேற்கொண்டு,  மார்பக புற்றுநோயில் இருந்து மீள முடியும்.

இன்னொரு தகவல்:

இந்த ஸ்மார்ட் ப்ராவை வடிவமைத்துள்ள ஜூலியன் பதினேழே வயதான டீன் ஏஜ் இளைஞர்!