கொரோனா வைரசின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். அதை தடுக்க வேண்டிய பிரதமர் மோடியோ, கொரோனா வைரஸை விரட்ட கைத்தட்டுங்கள், லைட் அடியுங்கள் என்று மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் அறிவிப்பு சமூக வலைதளங்களில் எள்ளி நகையாடப்பட்டு வருகிறது. இது என்ன வகையான தடுப்பு நடவடிக்கை, எதற்காக பிரதமர் இதுபோன்ற செயல்களை செய்யச் சொல்கிறார், ஏன் மின்சார விளக்கை அணைத்து விட்டு, டார்ச் லைட்டோ, அகல்விளக்கோ, மெழுகுவரத்தியோ அல்லது மொபைல் லைட்டையோ ஏற்றுச் சொல்கிறார்,
ஏன் 9 நிமிடங்கள் என்று குறிப்பிட்ட நேரம் வரை ஏற்றுங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
உலக நாடுகள் கொரானா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவை கண்டு அதிர்ச்சி அடைந்து, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுப்பது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், நமது பிரதமரோ, அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க லைட் அடியுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்.
கொரோனா நோயை விரட்டுவதில் இந்திய மக்களின் ஒற்றுமையை விளக்கும் வகையில், வரும் 5ம் தேதியன்று (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் விளக்கு ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதுதான் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டிய சமயத்தில், விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
சமீப நாட்களில் நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக டெல்லி நிஜாமுதீன் தபிலிகி ஜமாத் கூட்டம் காரணமாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால், சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சமூக நல்லிணக்கத்துக்கு களங்கம் உருவானது. இதன்மூலம் நாட்டில் இனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உருவாகி விடும் என்று கருதிதான், பிரதமர் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் விளக்கேற்ற கூறியுள்ளார் என்று தெரிவித்து வருகின்றனர்..
கொரோனாவை ஒழிப்பதில் 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நம்மில் ஒரு சிலர், நாம் மட்டுமே கொரோனாவை ஒழித்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். அது தவறு. நாம் தனிநபர் அல்ல. 130 கோடி மக்களின் பலம், ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே, இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால், மருத்துவ அறிஞர்களும், எதிர்க்கட்சிகளும் வேறுவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
மின் விளக்கை அணைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பது மூட நம்பிக்கை என்று ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றன்ர.
வேறு சிலரோ, நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை என்ன என்பது குறித்த நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள் பிரதமரே என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, ஏப்ரல் 5ந்தேதி, பாரதியஜனதா கட்சியின் மூலக்கட்சியான பாரதிய ஜன சங்கம் தோன்றிய நாள், அதைத்கொண்டாடும் வகையிலேயே பொதுமக்களை விளக்கேற்ற சொல்கிறார் பிரதமர் என்று விமர்சித்து வருகின்றனர்…
இப்படி பல்வேறு வகையான விமர்சனங்கள் தொடர அறிவியில் ரீதியிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பல மருத்துவர்கள் தங்களது அடையாளத்தை காட்ட மறுத்து, பிரதமரின் அறிவிப்பை நகையாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு நாட்டு அரசும், கொரோனாவின் பேயாட்டத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், முகக்கவசம், கிளவுஸ், சானிடைசர், சோப் போன்ற நோய்த்தடுப்பு கிருமி நாசினிகளை அடிக்கடி உபயோகித்து, நோய் பரவலை தடுத்து வருகிறது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரோபோக்களையும், டிரோன்களையும் களமிறக்கி நோய் பரவலை தடுத்த வருகிறது.. எதிர்காலத்தில் இதுபோன்ற நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு என்ன முன்னெச்சரிக்கை செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனைகளையும், ஆய்வையும் தொடர்ந்து வருகிறது.
ஆனால், இந்திய அரசும், பாரத பிரதமரும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மக்களே ஒருசேர கைதட்டுங்கள், மணி அணியுங்கள், விளக்கேற்றுங்கள், டார்ச் அடியுங்கள் என்று கூறி மக்களை தற்காலத்தல் இருந்து பின்னோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்று குற்றச்சாட்டுக்களை வீசி வருகின்றனர்.
பிரதமர் ஒளியேற்ற சொன்னால் அதற்கான காரணத்தை மக்களிடையே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, 9 நிமிடம் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினால் அது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும்தானே உருவாக்கும்…
பாரதப் பிரதமரின் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களிடையே வரவேற்பை பெறுவதற்கு பதில், அதிருப்தியையும், ஏமாற்றத்தையுமே உருவாக்கி வருகிறது…
இதுதான் இன்றைய இந்தியா. மோடி விரும்பும் இந்தியா… அதுதான் உண்மை…