சென்னை: இந்த தேர்ல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும். ஆனால், ஒற்றுமையான இண்டியா கூட்டணிதான் வெற்றி பெறும் என சிவகங்கை எம்.பி கார்ததி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடையே சில முரண்களும், பிரச்சினைகளும் ஏற்படுவது வழக்கமானதுதான் என தெரிவித்த கார்த்தி சிதம்பரம், அதிமுகவுக்கும் வாங்கு வங்கி உள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர், சித்தாந்தம் இல்லாத முதல் தலைமுறை வாக்காளர்கள்தான் விஜய்க்கு பெரும்பாலும் ஓட்டு போடுபவர்களாக இருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.

சென்னை குரோம்பேட்டையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வரும் மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு இடத்தை காங்கிரஸ் கேட்க அதிக வாய்ப்புள்ளது. திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவிடம் இதுபற்றி காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.
காங்கிரஸ் தற்போது 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற்று வைத்துள்ளது. தொகுதி பங்கீடு முடிவுகளுக்கு ஏற்ப, எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.
திமுக – காங்கிரஸ் உறவு
நீண்டகாலமாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடையே சிறு சிறு முரண்கள் வந்து போவது வழக்கமானதுதான். மாணிக்கம் தாக்கூர் ட்விட்டரில் வெளியிடும் கவிதைகளை, வெறும் பாரதியார் கவிதைகளாகதான் பார்க்க வேண்டும். திமுக குறித்து மாணிக்கம் தாக்கூர் பேசியது அவரது கருத்து. அதுபற்றி அவரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
தவெக குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “விஜய்யின் தவெக கட்சிக்கு கட்டமைப்பு அவ்வளவாக இல்லை. அது பிற்காலத்தில் வரலாம். ஆனால், அவர்களுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நகர்ப்புறத்தில் விஜய்க்கு ஓட்டுகள் அதிகமாக கிடைக்காலம். கிராமப்புறத்தில் அது குறைவாக இருக்கும். தவெகவுக்கும், விஜய்க்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் சித்தாந்தம் இல்லாதவர்கள். அவர்கள்தான் விஜய்யை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். விஜய்க்காக வரும் கூட்டம், ஓட்டுகளாகவும் மாறலாம். ஆனால், சீட்டுகளாக (வெற்றியாக) மாறுமா என்பதுதான் கேள்வி” என்றார்.
அதிமுக குறித்த கேள்விக்கு, “அதிமுகவையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களுக்கு கணிசமான வாக்கு வாங்கி இருக்கிறது. அவர்களது கூட்டணிக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. அதனால்,
இந்த தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும். ஆனால், ஒற்றுமையான இண்டியா கூட்டணிதான் வெற்றி பெறும்” என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
முன்னதாக, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், அச்சமில்லை… அச்சமில்லை என்று மாணிக்கம் தாகூர் பாரதியார் கவிதையை பதிவிட்டதில் எந்த அரசியல் சர்ச்சையும் இல்லை. நல்ல கவிதை என்பதால் பிரபலப்படுத்துகிறார். தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமை வகிக்கிறது. அதில்தான் காங்கிரஸும் இருக்கிறது.
திமுக குழு அமைத்ததும் அவர்களுடன் காங்கிரஸ் குழு பேசி, போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்யும். தேர்தலுக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும்.
தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு பிரதானக் கட்சியைவிட பிற கட்சித் தலைவர் தலைமை தாங்கினால் சிறப்பாக இருக்கும். அதிலும் சுழற்சி முறையில் மாநில கட்சித் தலைவர்களை நியமித்தால் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.
இதையடுத்து திமுக அரசு, பெண்களுக்கு ரூ.5 ஆயிரத்தை திடீரென கொடுத்துள்ளதே, இது தேர்தலுக்கான லஞ்சமா என்ற கேள்விக்கு, முறையாக பதில் அளிக்காமல், இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் மட்டும் தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் வாக்குகளாகக்கூட மாற வாய்ப்புள்ளது. பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது வரவேற்கத்தக்கது என்றார். மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள பெண்கள் விடுபட்டுள்ளது சிறிய குறைபாடுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]