திருவாரூர்: திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த எழுச்சிமிகு நிகழ்ச்சியில்  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆரூரா, தியாகேச என்ற கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.  இவ்வாறு உலகப் புகழ்பெற்ற திருவாரூர்  கோவிலின் ஆண்ட ஆழித்தேரோட்டம்  இன்று காலை திட்டமிட்டப்படி, தொடங்கிய நிலையில்,  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, வேளாகுறிச்சி ஆதினம் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். அவர்களுடன்  லட்சக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதனால் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் 5 வேலி பரப்பளவைக் கொண்டது.  இங்குள்ள தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் பெருமை வாய்ந்த இந்தத் தேரின் உயரம் 96 அடியும் 350 டன் எடை ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும்,  பங்குனி உத்திரத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் இன்று ஆழித்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.  இன்று தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாகவே  தேரோட்டத்திற்காக பந்தகால் முகூர்த்தக்கால் நடப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம்  27 ஆம் தேதி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, தேர் சுத்தப்படுத்தப்பட்ட, வர்ணம் பூசப்பட்டு, தயார் செய்யப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் தேர்த்திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் பொழுது ஆரூரா தியாகேசா என முழக்கமிட்டு தேரை இழுத்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் விநாயகர், முருகர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் செல்லும் நிலையில், ஆழித்தேரோட்டம் வெகு சிறப்பு பெற்றது.  திருவாரூரின்  4 வீதிகளில் ஆடி அசைந்து வரும் ஆழித்தேரின் அழகை காண  நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஆழித்தேரோட்டத்தையொட்டி, பல நகரங்களில் இருந்து திருவாரூருக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.   குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு பின்புறம் மருத்துவ குழுவினர் அடங்கிய அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு பின்புறம் மருத்துவ குழுவினர் அடங்கிய அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.