டோராடூன்:
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் கலந்துகொண்டார்.
ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.கவை சேர்ந்த் தருண்விஜய் எம்.பி முயற்சி செய்தார். அங்குள்ளவர்கள் எதிர்ப்பால் சிலை நிறுவ முடியாமல் போனது. இதுகுறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக முதல்வரும் இதுபற்றி உத்தரகான்ட் முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
தமிழக முதல்வரின் கடிதத்துக்கு பதில் எழுதிய உத்தரகான்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் உள்ள மேளா பவனில் நிறுவப்படும் என உறுதி அளித்தார்.
அதன்படி நேற்று ஹரித்துவார் நகரில் உள்ள மேளா பவன் வளாகத்தில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள், உத்தரகாண்ட் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதுகுறித்து முதல்வர் ஹரிஷ் ராவத், திருவள்ளுவர் சிலைக்கு பீடம் அமைப்பது குறித்து தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, ஆகஸ்டு முதல் வாரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும், அந்த இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டு அதற்கு திருவள்ளுவர் பூங்கா என பெயர் சூட்டப்படும் என்றும், இதற்கான அனைத்து செலவுகளையும் உத்தரகாண்ட் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றார்.