டெல்லி: இன்று திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதுங்ம உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன் இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி தமிழ் மொழியில் டிவிட் பதிவிட்டுள்ளார்.
உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் இரண்டாவது நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவரை போற்றும் வகையில், திருவள்ளுவர் தினத்தை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளுவர் போட்டோ மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தமிழகஅரசு, அரசியல் கட்சியினர் மரியாதை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்களையும் நெட்டிசன்கள் போற்றி வருகின்றனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.