திருப்பத்தூர்: 2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி என்று கூறியுள்ள விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன் விசிக யாருக்கும் அடிமை கிடையாது என கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன் பேசும்போது, அடுத்த ஆண்டு, அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலில் எல்லோரின் எதிர்பார்ப்பும் என்னவென்றால், விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சராவர் என்பதே என்றவர், அதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர், திருமா துணைமுதல்வர் ஆவதற்கான வாய்ப்புகள் அடுத்த 6 மாதத்தில் தெரியும் என்றவர், யாருக்கும் நாம் (விசிக) ஒன்றும் கொத்தடிமை அல்ல என்று கடுமையாக சாடியதுடன், .எந்த கட்சியோ, மாநிலமோ, மாவட்டமோ, தெருவோ, வீடோ.. யாரும் யாருக்கும் அடிமை கிடையாது என்றார்.
நம் கட்சி தலைவர் திருமாவளவன், ஒரு குடும்பத்தை வழிநடத்துவதை போல் கட்சியைவழிநடத்தி வருகிறார் என்றவர், தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் போடும் ஒப்பந்தம் மட்டும்தான் என்றும் கூறினார்.
கோவேந்தனின் பேச்சு, திமுக மற்றும் கூட்டணி கட்சியினரைடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், விசிக தொண்டர்கள் கோவேந்தன் பேச்சை வரவேற்று கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக, தனது கூட்டணி கட்சிகளை அனுசரித்து கூட்டணியை தொடர்ந்து வருகிறது. அதுபோல, அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேமுதிக, பாமக எந்த அணியும் சேரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையில் நாம் தமிழர், விஜயின் தவெக கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்க்க அக்கட்சி தலைமைகள் மறைமுக பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், சீமான் எப்போதும்போல யாருடனும் கூட்டணி இல்லை, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார். அதுபோல, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அறிவித்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அவரது கட்சி தலைமையிலான கூட்டணியில் சில கட்சிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் பாதிப்பு திமுக, அதிமுக கூட்டணியிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தரப்பில் பல்வேறு நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இதுகுறித்து பேசிய விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில், அவரும் விசிகவில் இருந்து விலகி, தற்போது தவெகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில், கூட்டணி கட்சிளனாக பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவினர் சிலருக்கும் அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல தமிழ்நாட்டிலும் ஆட்சி அதிகாரங்களில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வேண்டும் என வலியுறுத்தல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் விசிக அமைப்பு செயலாளர் கோவேந்திரன், திருமாவுக்கு துணைமுதல்வர் பதவி என கொளுத்தி போட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.