சென்னை
அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தாஇவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்வது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீர் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
கடந்த ஆண்டும் தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரில் பாதியைக்கூட கர்நாடகம் அளிக்கவில்லை. இந்த ஆண்டு தமிழகத்துக்குத் தண்ணீர் தரும் அளவுக்குக் கர்நாடக அணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தண்ணீர் தர வாய்ப்பு இல்லை என்று கூறுவது கர்நாடக அரசின் சுயநலம்சார்ந்த பிடிவாதப் போக்கையே காட்டுகிறது.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவர்களுக்குத் தற்காலிகமாக விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும். இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை தோழமையோடு சுட்டிக் காட்டுகிறோம்
.காங்கிரஸ் கட்சி இப்போது கூட்டாட்சி குறித்த தனது நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது பாராட்டத்தக்கதாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலாக உள்ள ஒத்திசைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் சில அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதைப் பற்றி அந்த வாக்குறுதிகளில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் புறக்கணிக்கும் விதமாகவும், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதிக்காமலும் நடந்து கொள்வது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழலில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உடனடியாக காவிரி நதிநீர் பிரச்சினையில் தலையிட்டு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அளித்த உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய பா.ஜனதா அரசை வலியுறுத்த வேண்டும்.
கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காலம் தாழ்த்தாமல் உடனடியாக காங்கிரஸ் தலைமை இதில் கவனம் செலுத்த வேண்டுமென இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்கிற முறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.