சென்னை

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்  குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்

சமீபத்தில் நடந்த வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. குறித்து பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இன்று ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார். மேலும் தி.மு.க.வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதல்-அமைச்சரிடம் திருமாவளவன் அளித்தார்.

முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

“பலமுறை வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கிய பின்னரும் தொடர்ந்து பேசியதால் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் கருத்தால் வி.சி.க.வின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் தி.மு.க.விடம் இருந்து எந்த நெருக்கடியும் எங்களுக்கு வரவில்லை. எங்களது கொள்கை பகைவர்கள், வளர்ச்சியை விரும்பாதவர்கள் அதை வாய்ப்பாக பயன்படுத்தினர்.

பங்கேற்ற நூல் வெளியீட்டு விழா குறித்து பல்வேறு சர்ச்சைகளை பரப்பினார்கள். நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் அம்பேத்கர் பற்றி பேசுங்கள் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் அறிவுறுத்தி இருந்தேன். விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்பது சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவு. வி.சி.க. மற்றும் த.வெ.க. இடையே எந்த மோதலும் இல்லை. விஜயோடு எந்த சர்ச்சையும் சிக்கலும் ஏற்பட்டது இல்லை”

என விளக்கம் அளித்துள்ளார்