பொதுவாக சிவபெருமானின் ஆலயங்களில் மட்டுமே காலபைரவருக்கு என்று ஓரு தனி சன்னதி இருக்கும். ஆனால் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி திருத்தலத்தைக் காக்கும் தெய்வமாக பைரவர் இங்கு விளங்குகிறார்.
பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த சிவபெருமான் அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை இந்த திருக்குறுங்குடி திவ்ய திருத்தலத்தில் போக்கிக் கொண்டார்.
அதனால் அந்த தோஷபரிகாரத்திற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானின் அம்சம் கொண்ட காலபைரவர் இத் திவ்யதேசத்தின் காவற் பொறுப்பை சிரமேற்கொண்டார்.
இந்த பிரம்மாண்ட காலபைரவரின் இடது புறத்தில் ஒரு விளக்குத் தூண் அமைக்கப் பெற்றுள்ளது. அதன் மேற்பகுதியில் பைரவரின் முகத்திற்கு அருகே ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் மற்றொரு விளக்கும் வைக்கப் பட்டுள்ளது. இதுதவிர இரண்டு சரவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விளக்குகளிலும் இருந்துவரும் தீப ஒளியானது பைரவருடைய முழு ரூபத்தின் அழகையும் மெருகூட்டிக் காட்டுகிறது.
ஆனால் மேலே உள்ள விளக்கிலிருந்து சுடர்விடும் தீபத்தின் ஜ்வாலையானது காற்று பட்டதுபோல் அசைவதை நம்மால் காண முடிகிறது. மற்ற மூன்று விளக்குகள் எந்தவித சலனமுமில்லாமல் சீராக சுடர்விடுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி காற்றில் அசைகிறது என்று நம்மை சற்றே சிந்திக்கவைக்கிறது?..
அது, பைரவரின் மூச்சுக்காற்று அந்த தீபத்தின்மீது பட்டு அதனால் அந்த தீபஜ்வாலை அசைகிறது என்பதை அறியும்போது நாம் அடையும் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதேசமயம் “பைரவர் மூச்சுக்காற்றை உள்ளே இழுக்கும்போது தீபத்தின் ஜ்வாலை அவரை நோக்கி திரும்பியும் மூச்சை வெளியே விடும்பொழுது எதிர் திசையில் விலகி அசைவதையும்” நாம் காண முடிகிறது.தீப ஆராதனை காட்டும்போது அவரது கண்களானது ஒளியில் அசைவதை இன்றும் நாம் நேரில் தரிசனம் செய்யும்போது கண்டு உணரலாம்.
இந்த பைரவருக்கு வடை மாலையும், பூச்சட்டையையும் சாற்றுவது பரிகார வழிபாடாக உள்ளது. அதேசமயம் அந்த சிறு வடைகளை ஒன்றன்பின் ஒன்றாக மாலைபோல கோர்த்து வடைமாலையாக செய்யாமல் ஒரே வடையாகத் தட்டி பைரவரின் மேலே சாற்றிவிடுகிறார்கள்.
மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த பைரவர் முக்கால் பாகம் கல்லினாலும் கால் பாகம் சுதையினாலும் விளங்கி அருள்தரும் திருமேனியாக பைரவர் விளங்குகிறார் என்று அறியும்பொழுது வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. மூலிகை வண்ணத்தினால் இந்த பைரவருக்கு அழகுமிளிர தீட்டி இருப்பதைக் காண்பதே தனி சுகம். அதனால் இந்த பைரவர் வருடங்கள் பல கழிந்த பின்னும்கூட அந்த வண்ணங்கள் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது அதிசயம்தான்!
இந்த திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ள அற்புத காலபைரவரை விஷ்ணுவும், பிரம்மனும், இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் அனுதினமும் பூசித்து வருவதாகவும், அதே சமயம் கலியுகம் முற்றிலும் முடிவடையும் காலம் வரையிலும் வாயுபகவானும் இந்த திருக்குறுங்குடி காலபைரவரை உபாசனை செய்து வருவார் என்பது சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.