அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நபரை புதிய தண்டு உயிரணு மாற்று முறை (Stem cell transplant) மூலம் குணப்படுத்தியுள்ளனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு புதிய ஸ்டெம் செல் மாற்று முறையைப் பயன்படுத்தி குணமடைந்த மூன்றாவது நபரான இவர் எய்ட்ஸ் நோயில் இருந்து இந்த முறையால் குணமடைந்திருக்கும் முதல் பெண் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முதிர்ந்த ஸ்டெம் செல்களை விட எளிதாகக் கிடைக்கக்கூடிய தொப்புள் கொடியின் இரத்தத்தை உள்ளடக்கிய ஒரு புதிய முறையைப் பயன்படுத்தி இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் எலும்பு மஜ்ஜை செல்களைப் போல தானம் பெறுபவருடன் 100 சதவீதம் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்த வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது.
“ஓரளவு பொருந்திய தொப்புள் கொடி இரத்த ஒட்டுதல்களைப் பயன்படுத்தும் திறன் உள்ளதால் நோயாளிகளுக்கு பொருத்தமான நன்கொடையாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கிறது.”
“அமெரிக்காவில் வருடத்திற்கு சுமார் 50 நோயாளிகள் இந்த நடைமுறையால் பயனடையலாம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கோயன் வான் பெசியன் கூறியுள்ளார்.
தொப்புள் ஸ்டெம் செல்கள் கூடுதல் நன்மையை அளிப்பதால் மருத்துவ ஆராய்ச்சியில் இது மேலும் பல முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் எச்.ஐ.வி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிக்க உதவும் என்றும் இந்த குழுவில் இடம் பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.