பீகாரில் புதிய திருப்பம்.. மூன்றாவது அணி உதயம்.. முதல்வர் வேட்பாளரும் அறிவிப்பு
அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணி அமைந்துள்ளது.
இந்த அணியில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி தலைமையில் எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி’ என்ற பெயரில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றன.
மெகா கூட்டணி’’யில் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாலாவின் ராஷ்டிரிய லோக் சமதா ( ஆர்.எல்.எஸ்.பி.) கட்சி இதுவரை இடம் பெற்றிருந்தது.
இரு தினங்களுக்கு முன்பு அந்த கூட்டணியில் இருந்து விலகியது. ஆளும் கூட்டணியில் சேர விரும்பியது.
ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வராததால் நேற்று திடீரென மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து லோக் சமதா, மூன்றாவது அணியை அமைத்துள்ளது.
லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி இதனை உறுதிப் படுத்தினார்.
‘’பீகாரில் நாங்கள் புதிய அணியை உருவாக்கி உள்ளோம். எங்கள் அணியின் முதல்வர் வேட்பாளராக உபேந்திர குஷ்வாலாவை அறிவிக்கிறோம்.’’ என்று தெரிவித்த மாயாவதி ’’ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்கு நாங்கள் பாடுபடுவோம்’’ என்று குறிப்பிட்டார்.
’’கொரோனா பரவல் காரணமாகத் தான், பிரச்சாரத்துக்குப் பீகார் செல்லப்போவதில்லை’’ என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி.