மதுரை: பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,  பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்ய சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளான அக்டோபர் 30-ஆம் தேதி அன்று ஆளும் கட்சி மற்றும் முக்கிய  அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று மரியாதை செய்வது வழக்கம்.

அதுபோல நடப்பாண்டும், இன்று முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குருபூஜை நடைபெறுகிறது. இதையடுத்து, பசும்பொன்னுக்கு சென்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர், முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பிறகு அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் மருதுபாண்டிய சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செய்தனர்.

மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்களால் மதுரையில் இன்று இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், வாக்குவங்கியை கணக்கிட்டு, அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.