லண்டன்: இந்தப் பால்வெளியில், மனிதர்களைப் போன்று நாகரீகம் அடைந்த குறைந்தபட்சம் 36 வகை வேற்றுகிரக உயிர்கள் இருக்கலாம் என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல்லாண்டுகளாகவே, மனிதனை ஒத்த நாகரீகமுடைய இதர அயல்கிரக இனங்கள் இருக்கலாம் என்ற கருத்து உள்ளது. மேலும், பூமியிலிருந்து அந்த இனங்கள் வெகுதூரத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. சில இனங்கள் நம்மைவிட அதிக பரிணாம வளர்ச்சியடைந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திலிருந்து இத்தகைய கூற்று வெளியாகியுள்ளது. “இந்த மதிப்பீடு உண்மையில் குறுகிய தன்மைக்கொண்டது என்றும், பூமியைப் போலவே, பால்வெளியில் வேறு இடங்களில் உயிர்களின் தோற்றம் மற்றும் பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
ஆஸ்ட்ரோபயாலஜிகல் காப்பர்நிக்கன் வரம்பின் அடிப்படையில், இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்று அப்பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் மேலும் கூறுவதாவது, “இந்த பால்வெளியில் பூமி மட்டும் அதிசயமானதல்ல. வேறு கிரகங்களிலும் மனிதனைப் போன்று நாகரீகமடைந்த உயிர்கள் இருக்கலாம். மனிதனைப் போலவே, 500 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்.
இந்த வகையில், குறைந்தபட்சம் 4 முதல் 211 வரையில் பரிணாமம் அடைந்த உயிரினங்கள் இருக்கலாம். ஆனால், 36 என்பது அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்ட எண்ணாகும்.
நமது ஆய்வில், பிற பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினங்கள் கண்டறியப்பட்டால், அது நமது நீண்ட நாகரீக வாழ்வுக்கு நல்லது. அதேசமயம், அப்படியான எதுவும் கண்டறியப்படவில்லை எனில், அது நமக்கு மகிழ்ச்சியான செய்தி அல்ல” என்றுள்ளனர்.