HMPV வைரஸ் குறித்து புதிதாக அச்சப்பட ஒன்றுமில்லை என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக சுகாதாரத் துறை தயாராக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த மனித மெட்டாநிமோனியா வைரஸ் (HMPV) ஒரு புதிய வைரஸ் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வைரஸ் சுவாச தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
இது பொதுவாக இருமல், காய்ச்சல், சளி அல்லது மூக்கில் அடைப்பு மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒருசிலருக்கு இதனால் மூச்சு திணறல் ஏற்படலாம்.
சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனா வைரஸ் போன்று வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் HMPV வைரஸ் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சர், “சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பரவல் குறித்து கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுவான சுவாச வைரஸ்களின் அதிகரிப்பு காணப்படவில்லை.
அதேவேளையில், சுகாதார அமைப்புகள் விழிப்புடன் இருக்கின்றன, எந்தவொரு சுகாதார சவாலையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.