தர்மபுரி:

புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவி கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முழுதுமாக நீர் வரத்து இன்றி காணப்படுகிறது.

ஒகனேக்கல்.. முன்பு..

தருமபுரி மாவட்டத்தில்  உள்ள ஒகேனக்கல் பகுதிதான்,  காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் நுழைவாசல் பகுதியாகும். இங்குள்ள அருவி மிகவும் புகழ் பெற்றது. ஆகவே சுற்றுலாவருபவர்கள் அதிகமாக இருப்பார்கள். இப்பதுதியினரின் வாழ்வாதாரமாக சுற்றுலாவே விளங்குகிறது.

ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து சில நாட்களுக்கு முன்பு அடியோடு நின்றுவிட்டது.

தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத கொடும் வறட்சிக்கு இதுவும் ஒரு உதாரணம் என்கின்றனர் விவசாயிகள்.

ஒகனேக்கல்.. இன்று

நீரியல் நிபுணர்கள், “எதிர்வரும் காலம் தமிழகத்துக்கு மிகக் கடுமையாக இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவதுபோல ஒகனேக்கல் இருக்கிறது. இதைக் கண்டுகொள்ளும் நிலையில் இல்லாத மாநில அரசு, அரசியல் காரணத்துக்காக இதை கவனிக்க விரும்பாத மத்திய அரசு இரண்டுமே தங்களது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். காவிரியில் தமிழகத்தின் நியாயமான உரிமையைப் பெற இரு அரசுகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.

இங்கு ஓடம் விடுபவர்கள், “சுற்றுலா பயணிகளை நம்பித்தான் இந்த பகுதியே இருக்கிறது. தற்போது நீர் இல்லாததால், சுற்றுலா பயணிகள் வருகை நின்றுபோய்விட்டது. ஓடம் விடுவது, மீன் விற்பது, மசாஜ் செய்வது என்று எளிய மக்கள் பிழைத்து வந்தார்கள். இப்போது அனைவரின் குடும்பத்தினரும் பட்டினியில் கிடக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டுநர்கள், 150-க்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளர்கள், 250-க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.