சென்னை: திமுக கூட்டணியைத் தவிர்த்து எங்களுக்கு வேறு கூட்டணி என்கிற சிந்தனையும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,  தவெக தலைவர் நடிகர் விஜய் போன்றவர்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் சய்து வருகின்றனர். திமுகவில் மன்னாட்சி, வாரிசு ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விசிக இருப்பதால், அக்கட்சி தலைவரான திருமாவளவன், இதுவிசயத்தில்  தனது கருத்தை ஆணித்தரமாக சொல்ல தயங்கி வருகிறார். மேலும், திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. அதைத்தொடர்து ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே விசிக திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்வதாகவும், திமுகவின்  அடிமையாக  செயல்படுவதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,”அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், நான் கலந்து கொள்ளவில்லை என உறுதி செய்யப்பட்டதும் நீங்கள் கலந்து கொள்ளவில்லை நான் கலந்து கொள்ளலாமா? என என்னிடம் கேட்டார் அதற்கு அனுமதி கொடுத்தது நான்தான். நீங்கள் கலந்து கொள்ளுங்கள். ஆனால் கவனமாகப் பேசுங்கள் எனக் கூறியிருந்தேன். அவரை போக வேண்டாம் எனக் கூறுவது ஜனநாயகம் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எளிய மக்களை ஒரு அமைப்பாக மாற்றி இருக்கிற கட்சி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அணுகுமுறை உண்டு, பின்னணி உண்டு. மற்ற கட்சிகளைப் போல விசிகவும் முடிவெடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். விசிக தொடக்கத்தில், ஒரு ‘தலித் கட்சி’ என்கிற அடையாளத்தோடு பொதுப்பணிகளில் ஈடுபட்டது. அரசியல் கட்சிகளில் ஈடுபட நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில், ஒன்று இந்த இயக்கத்தில் தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் வந்து சேரலாம், சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இந்த கட்சியின் பொறுப்புகளில் அங்கம் வகிக்க இடம் உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். அதை வேளச்சேரி தீர்மானம் என்று அழைக்கிறோம்.

 தலித் அல்லாதவர்கள் கட்சியில் வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது. எனவே துணை பொதுச்செயலாளர் மற்றும் தலித் அல்லாதவர் பொறுப்புகளில் இருக்கும்போது அவர்கள் தவறு செய்தால் தலைவர் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துத் தான் எந்த நடவடிக்கையும் எடுப்போம். அது எங்கள் கட்சியின் நடைமுறை.

ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல.   அடுத்து வர  இருக்கிற (2026) சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே திமுக  கூட்டணியை சிதறடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் விசிகவை ஒரு துறுப்புச்சீட்டாக பாஜக பயன்படுத்துவதாகவும், அதற்கு ஒருபோதும் இடம் தர மாட்டோம் எனவும், எங்களுக்கு வேறு கூட்டணி என்கிற சிந்தனையும் இல்லை, தேவையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசியவர்,   தொடர்ந்து மூன்று பொதுத்தேர்தலில் கட்டுக்கோப்போடு இருந்து திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் செல்வாக்குடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத இவர்கள் தேர்தலுக்கு முன்னரே கூட்டணியை சிதறடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் விசிகவை ஒரு துறுப்புச்சீட்டாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடம் தர மாட்டோம் என்றார்.

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…